சென்னை: கடந்த 2023ஆம் ஆண்டு சென்னையில் பல்வேறு இடங்களில் திருடு போன செல்போன், நகை, பணம் மற்றும் வாகனங்களை காவல்துறையினர் விசாரணை நடத்தி, அதனை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று மாலை, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பெருநகர சென்னை காவல்துறை ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் அவர்கள் பறிகொடுத்த பொருட்களை வழங்கினார். இதில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின்போது, 19 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3,337 சவரன் தங்க நகைகள், 50 கிலோ வெள்ளிப் பொருட்கள், 3 கோடியே 61 லட்சம் ரூபாய் ரொக்கம், 798 செல்போன்கள், 411 இருசக்கர வாகனகள், 28 ஆட்டோக்கள் மற்றும் 15 இலகுரக வாகனங்கள் ஆகியவை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர், “2023ஆம் ஆண்டில் மத்திய குற்றப்பிரிவு தொடர்பான 811 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 265 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. ஆதாய கொலை, வழிப்பறி, சங்கிலி பறிப்பு, செல்போன் பறிப்பு என கடந்த 2021 மற்றும் 2022ஆம் ஆண்டைக் காட்டிலும், 2023ஆம் ஆண்டு இக்குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் 714 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் சென்னையில் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளது” என தெரிவுத்தார்.
மாமல்லபுரத்தில் உலோக சிலைகளை பதுக்கி வைத்திருந்த நபர் கைது: திருச்சி மாவட்டம் லால்குடி கிராமத்தில் உள்ள திருமூல சுவாமி கோயிலில் ஐந்து உலோக சிலைகள் திருடப்பட்டது தொடர்பாக, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்த விசாரணையில், லட்சுமி நரசிம்மன் என்ற நபர் கோயிலில் உள்ள உலக சிலையை திருடியது தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில், அவரைப் பிடிப்பதற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு திருச்சி சரக்கம் காவல் ஆய்வாளர் இந்திரா தலைமையில் தனிப்படை அமைத்து, லட்சுமி நரசிம்மன் என்பவரை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
இந்த நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலில், மாமல்லபுரம் அடுத்த குச்சிகாடு பகுதியில் லட்சுமி நரசிம்மன் இருப்பது தெரிய வந்துள்ளது. அதனடிப்படையில், தனிப்படை போலீசார் மாமல்லபுரம் சென்று, லட்சுமி நரசிம்மனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மேலும் லட்சுமி நரசிம்மனுக்குச் சொந்தமான சதர்ன் ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட் என்ற குடோனில் 8 பழங்கால உலோக சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். அர்த்தனாரீஸ்வரர் சிலை, கேரள விஷ்ணு சிலை, அய்யனார் சிலை, புத்தர் சிலை, இரணு தவழும் கிருஷ்ணர் சிலைகள், நந்தி சிலை, நடனமாடும் கிருஷ்ணர் சிலை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து லஷ்மி நரசிம்மனிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், எட்டு உலக சிலைகளை வைத்து இருந்ததற்கான ஆவணங்கள், ஆதாரங்கள் எதுவும் அவரிடம் இல்லாததால், 8 சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டு, லட்சுமி நரசிம்மன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து லட்சுமி நரசிம்மனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
போலி பட்டப்படிப்பு சான்றிதழை உருவாக்கிய கேரளா பெண்:சென்னையில் அமைந்துள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் பிராந்திய பாதுகாப்பு அதிகாரி, கேரளாவைச் சேர்ந்த அமல்ஷாஜூக்கு எதிராக சென்னை பல்கலைக்கழகத்தின் போலிச் சான்றிதழ்கள் தயாரித்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். விசா பெறுவதற்கான நேர்காணலின்போது, போலியாக பட்டப்படிப்பு சான்றிதழை தயார் செய்து மோசடி செய்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். பின்னர், கேரளா பெண் அமல்ஷாஜியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஷாகினாமோல் என்பவர், போலி பட்டப்படிப்பு சான்றிதழ் தயாரித்து தந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.
அங்கு பதுங்கி இருந்த ஷாகினாமோலை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், ஆர்.ஐ .எஸ்.ராயல் அகாடமியின் உரிமையாளரான ஷாகினாமோல், 2018ஆம் ஆண்டு முதல் தகுதி இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கல்விக்காக வெளிநாடு செல்ல, பிரபல கல்வி நிறுவனங்கள் பெயரில் போலி பட்டப்படிப்பு சான்றிதழ்கள், ஆவணங்கள் தயாரித்து வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலி சான்றிதழ்கள் அச்சடிக்கப் பயன்படும் இயந்திரங்கள், 3 செல்போன்கள், போலி ஆவணங்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
முதலமைச்சரின் குடும்பம் பற்றி அவதூறு கருத்து பதிவு: பிரபல எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்களான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி கிருத்திகா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மீது தொடர்ச்சியாக மூன்று வெவ்வேறு ஐடிகளின் பெயரில் அவதூறுகள் பதிவிட்டு வருவதாக, சமூக ஊடக பிரிவின் காவலர் ஒருவர் அளித்த புகாரின் பெயரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு நபரின் நற்பெயரை கெடுத்தல், பெண்ணின் நாகரிகத்தைக் குறைக்கும் வகையில் செயல்படுதல், ஆபாசமாகப் பேசுதல், தகவல் தொழில்நுட்ப பிரிவு சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் நெல்லை பாய் 123, ஜே டி அருண், ஸ்மார்ட் 987 ஆகிய மூன்று ஐடிகளில் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் தொடர்ச்சியாக முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர்கள் பற்றி அவதூறு கருத்து பரப்பியதாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடையாளம் தெரியாத இந்த நபர்களை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்ச்சியாக சமூக வலைத்தளப் பக்கத்தில் இது போன்ற கருத்துக்களை பதிவிடுபவர்களை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேம் விளையாடிய கல்லூரி மாணவர் தற்கொலை:ஆன்லைன் விளையாட்டால் பல பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயிரிழந்ததால், பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் கேம்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து இந்தியா வெர்ஷனில் பப்ஜி கேம் புழக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று மாலை பி.காம் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஒருவர், தினமும் கல்லூரி நண்பர்களுடன் நீண்ட நேரமாக செல்போனில் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்து உள்ளார்.
இதனால் நீண்ட நேரமாக செல்போனில் கேம் விளையாடுவதை அவரது தாய் கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வடபழனி போலீசார், மாணவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:திருச்சியில் சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டிக் கொலை - 6 பேர் கைது!