சென்னை: விமான நிலையத்திலிருந்து நேற்றிரவு 11:30 மணிக்கு தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங் செல்லும் ஏர் ஏசியா விமானம் புறப்படுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தது. அந்த விமானத்தில் செல்லும் பயணிகள் அனைவரையும் குடியுரிமை சோதனை அதிகாரிகள் தீவிர சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, நீலகிரி மாவட்டம், ஊட்டியைச் சேர்ந்த அற்புத சகாயராஜ் (52) என்பவர் தனது குடும்பத்தினருடன் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா பயணிகளாக அந்த விமானத்தில் செல்வதற்காக வந்திருந்தனர். அவர்கள் குடியுரிமை சோதனைக்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, அற்புத சகாயராஜ் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை சென்னை விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு அற்புத சகாயராஜ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும், கடுமையான மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகவும் தெரிவித்தனர்.