ஈரோடு: ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்துள்ள சின்னதம்பி பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் சொந்தமாக செங்கல் சூளை மற்றும் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவரது உறவினர் ஒருவரின் மூலம் சாமிநாதன் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
அப்போது, சாமிநாதனிடம் கருப்புப் பணம் இருப்பதாகவும், அதனை மாற்ற உதவி செய்தால் அதிக லாபம் தருவதாகவும் கூறியதோடு, முதலில் மூன்று ஒரிஜினல் ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து பரிசோதித்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அந்த ரூபாய் நோட்டுகளை பரிசோதனை செய்ததில் அது உண்மையான ரூபாய் நோட்டுகள் என தெரியவந்ததை அடுத்து கருப்புப் பணம் மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து, ஈரோடு நாச்சியப்பா வீதிக்கு வந்த சாமிநாதன் உள்ளிட்ட சிலர், முத்துசாமியிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு, ரூ.30 லட்சத்திற்கான போலி ரூபாய் நோட்டுகளுடன் கூடிய வெள்ளைத்தாள்கள் அடங்கிய பேக் ஒன்றை கொடுத்துவிட்டு விரைந்துள்ளனர்.