சென்னை:விமான நிலையங்களில் 24 மணி நேரமும் இடைவிடாமல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அலுவலகம் என்றால், விமான சேவைகளை ஒருங்கிணைக்கக்கூடிய ஏடிசி டவர் என்று அழைக்கக்கூடிய ஏர் டிராபிக் கண்ட்ரோல் அலுவலகமாகும்.
பொதுவாக விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்கள், தரையிறங்கும் விமானங்கள், விமான நிலையத்தில் தரையிறங்காமல் விமான நிலையங்கள் வழியாக வான் வெளியைக் கடந்து செல்லும் விமானங்கள் உட்பட அனைத்து விமான சேவைகளையும் கண்காணித்து இயக்கி வரும் மிக முக்கியமான பாதுகாக்கப்பட்ட இடம்தான் இந்த ஏடிசி டவர்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஏடிசி டவர் அனைத்து விமான நிலையங்களிலும் காணப்படும். அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில் செயல்பட்டு வரும் ஏடிசி டவரின் நான்காவது தளம் மொட்டை மாடியில் உள்ள ஒரு அறையில் இன்று (மே 23) அதிகாலை 3.30 மணி அளவில், எதிர்பாராத் விதமாக திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.
இந்தச் சம்பவத்தின்போது, ஏடிசி டவரில் பணியில் இருந்த அதிகாரிகள் உடனடியாக சென்னை விமான நிலைய தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதை அடுத்து, சென்னை விமான நிலைய தீயணைப்பு பிரிவின் 3 தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்று, சுமார் 20 நிமிடங்களில் தீயை அணைத்துள்ளனர்.