திருநெல்வேலி:நெல்லை மாவட்டம்பேட்டை பகுதியைச் சேர்ந்த மைதீன் பிச்சை என்பவருக்கு சொந்தமாக, அதே பகுதியில் உள்ள சேரன்மாதேவி பிரதான சாலையில், மரம் மற்றும் இரும்பு உள்ளிட்ட கட்டுமானத்திற்கு தேவையான பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்று உள்ளது.
இந்த சூழலில், மைதீன் வழக்கம்போல கடையில் வியாபாரத்தை முடித்துவிட்டு நேற்று (செப்.28) இரவு வீடு திரும்பிய நிலையில், திடீரென அவரது கடையில் தீ பற்றி எரிவதாக அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, மைதீன் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன் கடையில் உள்ள பொருட்கள் மளமளவென எரிய தொடங்கியுள்ளது.
இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக பேட்டை காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய வாகனத்தின் மூலம் தீ அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. விற்பனை நிலையத்தில் இருந்த பொருட்களில் பெரும்பான்மையானவை மரம் உள்ளிட்டவைகள் என்பதனால் தீ எரியும் வேகம் அதிகரித்தது.
இதனைத் தொடர்ந்து, சேரன்மகாதேவி மற்றும் பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.