கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கணேஷ் நகரைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் வள்ளுவர் நகரைச் சேர்ந்த கண்ணன் இருவரும், தோணுகாலில் உள்ள ஒரு தீப்பெட்டி ஆலை ஒன்றைக் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகின்றனர். இந்த ஆலையில், பணியாளர்கள் நேற்று (மார்ச் 1) வழக்கம் போல, தனது பணிகளை முடித்துவிட்டு வீடுகளுக்குச் சென்ற நிலையில், இரவில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டும் ஆலையில் இருந்துள்ளனர்.
அப்போது, ஆலையில் உள்ள இயந்திரத்தில் திடீரென தீப்பிடித்துப் பற்றி எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேறி, தீயணைப்பு படை மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தகவல் அறிந்த கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி சுந்தர் ராஜ் தலைமையிலான தீயணைப்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் தீ தொடர்ந்து எரிந்ததால், தீயை அணைப்பதற்கு டிராக்டர் மூலமும் தண்ணீர் கொண்டு வந்து தீயணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. நீண்ட போராட்டத்திற்குப் பின்னர், தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதில் நல்வாய்ப்பாக தொழிலாளர்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. ஆனால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் முற்றிலுமாக சேதமடைந்தன.
இதையடுத்து, சம்பவ இடத்தை கோவில்பட்டி வட்டாட்சியர் சரவணப்பெருமாள், வருவாய் ஆய்வாளர் ராமமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து, நேஷனல் சிறு உற்பத்தியாளர் சங்கத்தலைவர் பரமசிவமும் பார்வையிட்டார். இந்நிலையில், எவரும் எதிர்பாராத வகையில் இரவில் தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:ராமேஸ்வரம் கஃபே யாருடையது? அப்துல் கலாமுக்கு உள்ள தொடர்பு!