சென்னை: சென்னை அடுத்த மேற்கு தாம்பரம் பீமேஸ்வரன் கோவில் தெரு மற்றும் திருவேங்கடம் நகர் தெருவை இணைக்க கூடிய பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் திவ்யா என்கின்ற பெண், தனது வீட்டில் விலை உயர்ந்த ஜெர்மன் ஷெப்பர்ட் (German Shepherd) இன வெளிநாட்டு நாய் வளர்த்து வருகிறார்.
அந்த வளர்ப்பு நாயை முறையாக நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்லாமல் அப்படியே உலாவ விட்டு விடுவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து திவ்யாவின் வீட்டின் கதவு திறந்து வைக்கப்படுவதால் அவர் வளர்க்கும் நாய் தெருவுக்கு வந்து அப்பகுதி மக்களை கடிக்க பாய்வதாகவும், துரத்தி சென்று கடிக்க முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாம்பரம் மாநகராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்களை கடிக்க வந்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து நாயை வளர்க்கும் திவ்யாவிடம் அப்பகுதி மக்கள் கேட்ட போது உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள், நாய் இப்படித்தான் திரியும் என அடாவடித்தனமாக கூறியதாகவும் அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், ஆக்ரோஷமாக திரியும் இந்த நாய் சாலையில் திரியும் மாடுகளையும் நாய்களையும் கடிக்க முயற்சிப்பதாகவும், இந்த நாயால் குழந்தைகளை வெளியே விட அச்சமாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, அப்பகுதியில் உள்ள ஒரு மழலையர் பள்ளிக்கு குழந்தைகளை விட வரும் பெற்றோர்கள், அந்த நாயால் எந்த ஒரு ஆபத்தும் ஏற்பட்டு விட கூடாது என சாலையை சுற்றி அழைத்துச் செல்வதாகவும் கூறப்படுகிறது.