திருநெல்வேலி: தச்சநல்லூர் அருகே பால் கட்டளை வடக்குத் தெருவைச் சேர்ந்த விவசாயி நாராயணன். இவர் இன்று (ஏப்.29) தனது குடும்பத்தினரை கடந்த ஆறு மாதமாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.
மனு அளித்த பிறகு விவசாயி நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "எங்கள் பகுதியில் உள்ள ஆதீனத்துக்குச் சொந்தமான சுமார் இரண்டரை ஏக்கர் கோயில் நிலத்தைக் நான் குத்தகைக்கு வாங்கினேன். அந்த நிலத்தை ஊருக்கு தானமாகத் தரும்படி ஊர் நிர்வாகிகள் கேட்டனர். அதைக் கொடுக்க மறுத்த காரணத்தால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு எனது குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து ஊர் நாட்டாமை இளையராஜா உத்தரவிட்டார்.
மேலும், தனது குடும்பத்தினருடன் பேசுபவர்களையும் ஊரை விட்டு ஒதுக்கும்படியும், அவர்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும்படியும் கூறினார். இப்படி என்னிடம் பேசிய 3 பேர் குடும்பத்தையும் தற்போது ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதால் எங்களிடம் யாரும் பேசுவதுமில்லை, விவசாய வேலைகளுக்கு ஆட்கள் வருவதுமில்லை. இதனால், எனது விவசாய தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டாமை சொல்வது தான் எங்கள் ஊரில் தீர்ப்பு. அவரது தீர்ப்புக்கு ஊரே கட்டுப்பட வேண்டும்.
மேலும், என்னுடன் பேசியதால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் மீண்டும் ஊரோடு சேர வேண்டுமென்றால் ஊரில் உள்ளவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதோடு, பத்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். நான் ஊரோடு சேர வேண்டுமென்றால் அந்த நிலத்தை எழுதி வைக்க வேண்டும் என்கிறார்கள். காவல்துறை, நீதிமன்ற போன்றவற்றிற்கு ஊர் நாட்டாமை கட்டுப்பட மாட்டார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தோம் போலீசார் பேசியும் ஊர் நாட்டாமை கேட்கவில்லை" என தெரிவித்தார்.