திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஒன்றியம் தாளப்பதி பகுதியில் தமிழ்நாடு பனியன் மற்றும் ஜவுளி கழிவு மறுசுழற்சி ஆலைகள் சங்கம் சார்பில் முதல் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மறுசுழற்சி முறையில் நீர் மாசுபடுதல், சுற்றுச்சூழல் மாசுபடுதல் முற்றிலும் தடுக்கப்படுகிறது என்பதை மத்திய, மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று சலுகைகள் பெறுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இதுமட்டுமல்லாது, கொள்முதல் குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்ய கமிட்டி அமைத்து, குறைந்தபட்ச கொள்முதல் விலை பட்டியலை வெளியிடுதல் என்றும், தொழிலாளர் ஒப்பந்ததாரர் மற்றும் தொழிலாளர் நலன் விபத்து காப்பீடு போன்றவற்றுக்கு ஆலோசனை வழங்கி தீர்வு காணுதல், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொதுவான நடுநிலையோடு சங்கம் செயல்பட வேண்டும் உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், சங்கத்திற்கான விதிமுறைகள் வெளிப்படுத்தப்பட்டு அதை முறையாக பின்பற்றவும் அறிவுரை வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தமிழ்நாடு பனியன் மற்றும் ஜவுளி கழிவு மறுசுழற்சி ஆலைகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட நிர்வாகி சூரியகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.