சென்னை: ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ஆம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய விமானப்படையின் 92 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இன்று (அக்.06) காலை 11 மணி அளவில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவைகளின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த சாகச விமானங்கள் காலை 10:30 மணியளவில் தாம்பரம் விமானப் படைத்தளத்தில் இருந்து புறப்பட்டு சென்னை மெரினா கடற்கரையில் சாகசத்தை நிகழ்த்தின. இதில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான 72 விமானங்கள் பங்கேற்றன. விமானப் படையின் விமான சாகசம் கடந்த 2003ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற நிலையில் 21 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் மெரினா கடற்கரையில் நடைபெற்றது.
பொதுவாக இந்த விமானப்படை சாகச நிகழ்ச்சிகள் டெல்லியில் நடைபெறுவதுதான் வழக்கம். ஆனால், இந்த ஆண்டு இந்திய விமானப் படை தனது சாகச நிகழ்ச்சியை நடத்த சென்னையை தேர்ந்தெடுத்துள்ளது. இதற்கான கடந்த மூன்று நாட்களாக பல்வேறு ஒத்திகை நிகழ்வு அக்டோபர் 4 ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இதில் சுக்கோய் சு 30, MI 17 VH ஹெலிகஃப்டர்கள், அட்வான்ஸ் லைட் ஹெலிகஃப்டர் (ALH), தேஜஸ் போர் விமானம், மல்ட்டிரோல் காம்பேட் ஏர்கிராப்ட், ரஃபேல் ஏர்கிராப்ட் உள்ளிட்டவை பங்கேற்றன.
இதையும் படிங்க:AIR Show பார்க்க மெரினா போறீங்களா? தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!