சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி, நெடுங்குன்றம் ஊராட்சி மன்றத்தில் அதிமுக 12வது வார்டு உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார். இவர் நெடுங்கன்றம் பகுதியில் வீட்டுடன் உணவகம் ஒன்றையும் நடத்திவரும் நிலையில், நேற்று முன்தினம் (ஏப்.28) தனது மனைவி மற்றும் மகனுடன் உணவுகளைத் தயார் செய்து கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அடுத்தடுத்து இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டுத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்படி அந்த நபர்கள் வீசிய குண்டுகள் இரும்பு கதவில் பட்டு தீப்பொறியுடன் பலத்த சத்தமாக வெடித்ததால் அலறிய முத்துப்பாண்டி குடும்பத்தினர், ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவல் அறிந்த தாம்பரம் துணை ஆணையாளர் பவன்குமார்ரெட்டி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு, மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தீவிரமாகத் தேடிவந்தனர்.
இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (22) என்பவரை போலீசார் விரட்டிச் சென்று பிடிக்க முயன்ற போது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவருக்கு மருத்துவமனையில் மாவுகட்டு போட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.