தஞ்சாவூர்: கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற்ற முதல்கட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பந்தநல்லூர் காவல் சரகம், கோணுளாம்பள்ளம் வாக்குச்சாவடி எண் 2இல், அதிமுக முகவராக சண்முக ராஜேஸ்வரன் என்பவர் பணி செய்தபோது, அதே வாக்குச்சாவடியில் பாமக முகவராக பிரகாஷ் மற்றும் குமரன் ஆகியோர் சண்முக ராஜேஸ்வரனை தங்களது சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என மிரட்டல் விடுத்துக் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டு, சண்முக ராஜேஸ்வரன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றதாகவும், இதேபோல் அதிமுகவைச் சேர்ந்த உலகநாதன் என்பவரிடம் கூறியதால், அவருக்கும், பாமகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், பாமகவினர் உலகநாதனைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த சண்முக ராஜேஸ்வரன், காயமுற்ற உலகநாதனை மீட்டு, முதற்கட்டமாக கோணுளாம்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு, மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பாமகவினர் தங்களை அதிமுகவினர் தாக்கியதாகக் கூறி, பந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து, சண்முக ராஜேஸ்வரன் தனக்குச் சொந்தமான குடோனில் இருந்த போது, அங்கு சென்ற பந்தநல்லூர் காவல் ஆய்வாளர் முத்துக்கிருஷ்ண ராஜா, "நீ என்ன பெரிய ரவுடியா?" என கேட்டு, சண்முக ராஜேஸ்வரனை தாக்கியபடி, அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.