திருநெல்வேலி:நெல்லை ராமையன்பட்டி அருகே உள்ள வேப்பங்குளம் பகுதியை சேர்ந்தவர் பால்துரை. கூலித் தொழிலாளியான இவருக்கு எஸ்தர் மேரி என்ற மனைவியும், 4 மகள்களும் உள்ளனர்.
இதில் 3-வது மகள் செல்வம் (19) என்பவர் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இளைய மகள் சுதர்சனா நெல்லை டவுனில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை தங்கை சுதர்சனாவை பள்ளிக்கு அனுப்புவதற்காக ராமையன்பட்டி சிவாஜி நகருக்கு இருசக்கர வாகனத்தில் செல்வம் அழைத்து வந்துள்ளார்.
அதன் பின்னர் சிவாஜி நகர் பேருந்து நிறுத்தத்தில் டவுன் வழியாக செல்லும் அரசு பேருந்தில் தங்கை சுதர்சனாவை ஏற்றி அனுப்பிவிட்டு, செல்வம் வீட்டிற்கு செல்ல சாலையை கடந்து எதிரே வந்த அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றபோது, நெல்லையை நோக்கி வேகமாக வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
இதையும் படிங்க:மகளிர் உரிமைத் தொகை; 'விரைவில் குறைகள் நீங்கும்' - உதயநிதி ஸ்டாலின் சொன்ன தகவல்..!
இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த செல்வம் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதை பார்த்தவர்கள் உடனடியாக மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் கல்லூரி மாணவி சிக்கிய சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்போரை பதை பதைக்க செய்கிறது. அதில் செல்வம் தனது தங்கையை ஏற்றுவிட்ட பஸ் அருகில் நிற்கிறது. தன் முன்பே அக்கா விபத்தில் சிக்கியதை கண்டு தங்கை சுதர்சனா பதட்டத்தோடு அருகில் சென்று பார்த்த போது செல்வம சடலமாக கிடந்ததைக் கண்டு கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்