சென்னை:18வது மக்களவைத் தேர்தல் மற்றும் அதன் வாக்கு எண்ணிக்கை முடிவுற்றுள்ள நிலையில், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்திற்கு பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் அக்கட்சி, மாநிலக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து கூட்டணி அரசாங்கத்தை அமைக்கவுள்ளது. அதேநேரம், கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை விட இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி, மக்களின் அதீத நம்பிக்கையைத் தக்க வைத்துள்ளது.
இந்நிலையில், வரும் காலத்தில் பாஜக ஆட்சியில் நிலவப்போகும் சிக்கல்கள் என்ன? இந்த தேர்தலில் பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காமல் போனதற்கு என்ன காரணம்? தமிழகத்தில் பாஜகவின் நிலை மற்றும் நிலைப்பாடு என்ன? இந்தியா கூட்டணிக்குக் கிடைத்திருக்கும் வெற்றி என்ன என்பது குறித்து மூத்த பத்திரிகையாளரும், தி இந்து குழும இயக்குனர்களில் ஒருவருமான என்.ராம் ஈடிவி பாரத்திற்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார். இதில் அவர் பேசியவற்றைக் காணலாம்.
கேள்வி: மத்தியில் பாரதிய ஜனதா கட்சி 3வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. எனினும், முன்பு போல தனிப் பெரும்பான்மை பெறவில்லை. இந்த அரசு குறித்து உங்கள் பார்வை என்ன?
மத்தியில் மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆனாலும், இனி அவரால் தன்னிச்சையாக செயல்படவே முடியாது. எந்த முடிவாக இருந்தாலும் மாநிலக் கட்சிகளுடன், அதிலும் முக்கியமாக ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களுடன் கலந்து ஆலோசனை செய்தே திட்டங்களை மேற்கொள்ள முடியும்.
இதில் ஏதேனும் கருத்து வேறுபாடு மற்றும் சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில், அவர்கள் கூட்டணியில் இருந்து விலகவும் வாய்ப்பு உள்ளது. இதனால் ஆட்சி மாற்றமும் ஏற்படலாம். ஏனென்றால், பிரதமர் மோடிக்கு இந்த கூட்டணிக் கட்சிகளோடு இணங்கி ஆட்சி செய்த அனுபவம் சுத்தமாக இல்லை. மேலும், அவர் இன்று வரை முதலமைச்சர் தேர்தலிலும் சரி, பிரதமர் தேர்தலிலும் சரி மிகப்பெரிய கூட்டத்தை தன்பக்கம் வைத்துக்கொண்டு தான் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்து 10 ஆண்டுகளாக அவர் அனைத்து முடிவுகளையும் தன்னிச்சையாக எடுத்திருக்கலாம். இனி அவருக்கு அந்த சுதந்திரம் இல்லை. இனி எடுக்கப்போகும் முடிவுகள் கண்டிப்பாக அனைவரையும் கலந்து ஆலோசித்துவிட்டு தான் எடுக்க முடியும். அதிலும் குறிப்பாக, இந்தியக் குடிமக்கள் பதிவேடு (NRC), பொது சிவில் சட்டம் (Uniform Civil Code), நிதித்துறை மற்றும் மாநிலங்கள் மீதான ஆளுநர்களின் தலையீடு ஆகியவற்றில் மிகப்பெரிய மாற்றம் கண்டிப்பாக இருக்கும். அப்படி மாற்றம் இல்லை என்றால், மாநிலங்கள் வாரியாக மிகப்பெரிய பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும்.
பிரதமர் மோடியைப் பொறுத்தவரை, அவருக்கு இது முதல் தோல்வி என்றே கூறலாம். கூட்டணிக் கட்சிகளோடு வேறு வழியின்றி சகித்துக்கொண்டு ஆட்சி நடத்தும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். இதனால், பிரதமர் மோடியின் அரசியல் போக்கில் இனி கண்டிப்பாக வித்தியாசம் இருக்கும்.
சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோர் பாஜக அரசுடன் இணங்கி செயல்பட எந்த அளவுக்கு வாய்ப்பு இருக்கிறது?
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மாநில உரிமைகளுக்கும், சுயமரியாதைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் மனிதர். தனது அரசியல் வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்களைக் கொண்டுள்ள திறமையான அரசியல் தலைவர். அதேபோல, என்னதான் கூட்டணியில் இருந்தாலும், சில நேரங்களில் அவர்களின் கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களில் இருந்து மாறுபட்ட கருத்தைத் தெரிவிக்கும் தலைவர்களின் மிக முக்கியமானவர், நிதிஷ்குமார். இப்படியான தலைவர்களுடன்தான் பாஜக இனி ஆட்சி செய்தாக வேண்டும். மற்றொரு பக்கம், என்னதான் கூட்டணி அமைத்து ஆளும் கட்சியோடு இணைந்து ஆட்சி செய்தாலும், பிரதமர் மோடியின் கருத்துக்களுக்கு சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோரால் முழுமையாக உடன்பட முடியாது. அப்படி உடன்பட்டால் அவர்களின் அரசியல் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும்.
இந்தியா கூட்டணியின் தற்போதைய அரசியல் இலக்கு மற்றும் வெற்றி எந்த அளவுக்கு சாத்தியமாகி இருக்கிறது?
இந்த தேர்தலில்பாஜகவுக்கு இணையாக காங்கிரஸ் கட்சியும் சரிசமமாக தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. குறிப்பாக, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் மக்கள் இந்தியா கூட்டணியை மிகுதியாக ஆதரித்துள்ளனர். மேலும், மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி இந்த வருடத் தேர்தலில் நன்றாக முன்னேறி இருக்கிறது. இனி வரும் மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றி முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.