கோயம்புத்தூர்: ஒண்டிப்புதூர் பகுதி, நஞ்சப்ப செட்டியார் வீதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரது மகன் பிரணவ். இவர் சின்னவேடம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த பேரரசு என்பவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், இருவரும் ஒண்டிப்புதூர் பகுதியில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தபோது, பேரரசு என்பவர் பிரணவ் முகத்தில் மிளகாய்பொடி தூவி அரிவாளால் நேற்று (பிப்.17) வெட்டிக் கொலை செய்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பிரணவ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த சிங்காநல்லூர் போலீசார் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், தப்பி ஓடிய கொலையாளி குறித்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.