மதுரை: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விஜயா என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் புதுக்கோட்டை அரசு கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். எனது மகன் விக்னேஷ். கடந்த மார்ச் 26ஆம் தேதி எங்களது பக்கத்து வீட்டார் கலா என்பவருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இந்த நிலையில், அந்த சண்டையை நிறுத்த எனது மகன் முயன்றான்.
இதில், கோபமடைந்த கலா அவருக்குத் தெரிந்த தமிழ், யோகேஸ்வரன் மற்றும் பாலசுந்தரம் ஆகியோரிடம் இது குறித்துக் கூறியுள்ளார். அவர்கள், அன்றைய தினம் இரவு எனது வீட்டை உடைத்து எனது மகனைச் சாதிய ரீதியாகவும், தகாத வார்த்தைகளாலும் திட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டுச் சென்றனர்.
இந்த நிலையில், அன்று இரவு 12:15 மணியளவில் மகேந்திரன் என்பவர் எனது வீட்டிற்கு வந்து எனது மகனை வெளியில் அழைத்துச் சென்றார். அதன் பின்னர், சிலர் சேர்ந்து என் மகனைத் தாக்கியதோடு, கால்களையும் கைகளையும் மீன் வளையால் கட்டி திருவாப்பாடி கண்மாயில் வீசிச் சென்றுள்ளனர். இதன் காரணமாக எனது மகன் உயிரிழந்தான்.
இந்த வழக்கை காவல்துறையினர் முறையாக விசாரிக்கவில்லை. இந்த நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் 29ஆம் தேதி என்னிடம் அனுமதி பெறாமலும், வீடியோ பதிவு செய்யாமலும் எனது மகனின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ளது. இது நீதிமன்ற விதிகளுக்கு எதிரானது.