தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சித்திரைத் திருவிழா பாதுகாப்பு முடிவுகள் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய மதுரை ஐக்கோர்ட் உத்தரவு! - Madurai Chithirai Festival 2024 - MADURAI CHITHIRAI FESTIVAL 2024

Madurai Chithirai Festival 2024: சித்திரைத் திருவிழா பாதுகாப்பு குறித்த அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Madurai Chithirai Festival 2024
Madurai Chithirai Festival 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 5, 2024, 6:24 PM IST

மதுரை: மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார் அதில், "மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின்போது, போதுமான அளவு காவல்துறை பாதுகாப்பு வழங்கவும், மொபைல் மருத்துவ சேவைகளை வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும், மீனாட்சியம்மன் கோயில் மற்றும் கள்ளழகர் திருக்கோயிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். சித்திரைத் திருவிழாவின்போது, சப்பரம் செல்லும் பகுதிகளில் சாலை வசதி முறையாகச் செய்யப்பட்டு இருப்பதையும், முறையான மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்த வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் அருள் முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, "சித்திரைத் திருவிழாவின்போது பாதுகாப்புப் பணிகளுக்காக எவ்வளவு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்? என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து அரசு தரப்பில், மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், காவல்துறை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என்றும் சித்திரைத் திருவிழாவைச் சிறப்பாக நடத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், சித்திரைத் திருவிழா பாதுகாப்பு குறித்த அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையைத் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:அதிமுக அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லஞ்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.. ஜோ மைக்கேல் மனு தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details