தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டாக் கத்தியுடன் மிரட்டிய இளைஞர்கள்... அலறிய வியாபாரிகள்.. தேனியில் பரபரப்பு..!

தேனியில் மதுபோதையில் இருந்த வாலிபர்கள் பட்டா கத்தியுடன் வியாபாரிகளை மிரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பட்டா கத்தியுடன் இளைஞர்கள்
பட்டா கத்தியுடன் இளைஞர்கள் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2024, 11:00 AM IST

தேனி:மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலைக்குண்டு கிராமத்தில் 3 வாலிபர்கள் மது போதையில் தகாத வார்த்தைகளால் பேசியவாறு கடைகளுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை கீழே தள்ளி விட முயன்றனர்.

அப்போது அங்கிருந்த வியாபாரிகள் வாலிபர்களை கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் வியாபாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினர். வாக்குவாதத்தின் போது, வாலிபர் ஒருவர் திடீரென பட்டாக்கத்தியை எடுத்து வியாபாரிகளை மிரட்ட தொடங்கினார். இதனால் அச்சமடைந்த வியாபாரிகள் கடைகளுக்குள் ஓடினர்.

அப்போதும் விடாமல் துரத்திய வாலிபர்கள் வியாபாரிகளை கத்தியால் வெட்ட முயன்றனர். கடையின் கதவுகளை அடைத்துக் கொண்டதால் அதிர்ஷ்டவசமாக வியாபாரிகள் உயிர் தப்பினர். இது குறித்து வியாபாரிகள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வாலிபர்களை பிடிக்க முற்பட்டனர். ஆனால், போலீசாரை கண்டதும் அங்கிருந்து வாலிபர்கள் தப்பியோடி தலைமறைவாகினர்.

இதையும் படிங்க:16 வயது சிறுமி கொலை வழக்கு: கணவன் மனைவி உட்பட ஆறு பேர் நீதிமன்ற காவலில் அடைப்பு!

இது குறித்து அந்த பகுதி வியாபாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், பட்டாக்கத்தியுடன் வியாபாரிகளை அச்சுறுத்திய கடமலைக்குண்டு அம்பேத்கர் காலனியை சேர்ந்த சதீஷ், கருப்பசாமி, காமாட்சி ஆகிய மூன்று வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். மது போதையில் வாலிபர்கள் பட்டாக்கத்தியுடன் வியாபாரிகளை மிரட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களினால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவது அவ்வப்போது செய்திகளின் மூலம் பார்த்து வருகிறோம். இதனை தடுக்கும் விதமாக காவல்துறையினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, போதை பொருள் குறித்து அரசும், தனியார் அமைப்புகளும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. இருப்பினும், அவ்வப்போது போதைக்கு ஆளாகும் இளைஞர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது பொதுமக்களுக்கு அச்சத்தை கொடுத்து வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details