சென்னை:கோடை வெயிலின் உக்கிரம் தணிக்க மெரினா கடற்கரை வரும் மக்களை நேரக் கட்டுப்பாட்டு இன்றி அனுமதித்தால் சட்டவிரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளது என காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜலீல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி உக்கிரம் காட்டும் நிலையில், வெப்பம் தணிக்க மக்கள் மெரினா கடற்கரைக்கு வருவதைச் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஆனால், இரவு 10 மணிக்கு மேல் கடற்கரையில் இருக்கக் கூடாது எனக் கூறி காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்துவதாகவும், கான்கிரீட் காடாகிப் போன சென்னை நகரத்தில், உயர்ந்த கட்டிடங்களால் வெப்பத்தின் அளவு பல மடங்கு அதிகரிப்பதுடன், தென்றல் காற்று நகருக்குள் வீச முடியாத நிலையும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடைகள், ஹோட்டல்கள் 24 மணி நேரமும் செயல்படவும், நட்சத்திர விடுதிகளில் இரவு நேரங்களில் மது பரிமாற அனுமதித்துள்ள அரசு, வெப்பம் தணிக்க கடற்கரைக்கு வரும் மக்களுக்கு மட்டும் நேரக்கட்டுப்பாடு விதித்துள்ளதாகவும் கூறியுள்ளார். கடற்கரைக்கு வரும் மக்கள் இரவு 10 மணிக்கு மேலும் அனுமதிக்கவும், அவர்களை துன்புறுத்தக் கூடாது என காவல் துறையினருக்கு அளித்த விண்ணப்பத்தைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், முகமது சபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது காவல்துறை தரப்பில் ஆஜராக இருந்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியராஜ், இரவு நேரங்களில் நேரக் கட்டுப்பாடு இல்லாமல் மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்க முடியாது எனவும், அவ்வாறு அனுமதித்தால் குற்றச் செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 54 பேர் மெரினா கடற்கரையில் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இரவு நேரங்களில் கடற்கரை வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் நேரக் கட்டுப்பாடு இல்லாமல் அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.
மேலும், இரவு நேரங்களில் கடற்கரைக்கு வரும் கடல் ஆமைகளுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும், சென்னை மாநகர காவல் சட்டம் 41-ன் படி பொது இடங்களில் கூடுவதற்கான நேரக் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு காவல்துறைக்கு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தற்போது கோடை காலம் நிறைவடைந்து விட்ட நிலையில், இந்த மனு மீது வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மனுதாரர் கோரிக்கை மனுவை பரிசீலித்து காவல்துறை முடிவெடுக்குமாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க:“மாநிலத் தலைவராக நான் இருக்கும் வரை அதிமுகவுடன் கூட்டணி கிடையாது” - அண்ணாமலை திட்டவட்டம்! - Bjp Annamalai