நீலகிரி:குன்னூர் அருகே உள்ள உழவர் சந்தை மாடல் ஹவுஸ் பகுதிகளில் கரடி சர்வ சாதாரணமாக உலா வந்துள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால், வனத்துறையினர் குன்னூர் நகரப் பகுதியில் சுற்றித் திரியும் கரடியைப் பிடிப்பதற்கு கூண்டுகள் வைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனங்கள் சூழ்ந்த பகுதியாகும். 65 சதவீதம் வனப்பகுதியைக் கொண்டுள்ள இப்பகுதியில் வன விலங்குகளான யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. தற்போது கோடை காலம் என்பதால், வனப்பகுதிகளில் நிலவும் வறட்சியின் காரணமாக வன விலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்கு வருவது அதிகரித்துள்ளது.
இவ்வாறு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள், கால்நடைகள் மற்றும் மனிதர்களைத் தாக்குவது அவ்வப்போது நடைபெறுகிறது. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரு தினங்களாக குன்னூர் பேருந்து நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையம் பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றைக் கரடி, தற்போது குன்னூர் அருகே உள்ள உழவர் சந்தை மாடல் ஹவுஸ் பகுதிகளில் இரவு நேரத்தில் உலா வந்துள்ளது. இதனை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. உழவர் சந்தை மாடல் ஹவுஸ் பகுதிகளில் இரவு நேரங்களில் கரடி உலா வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வனத்துறையினர் உடனடியாக குன்னூர் நகரப் பகுதியில் சுற்றித் திரியும் கரடியைப் பிடிப்பதற்கு கூண்டுகள் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வனத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.