சென்னை :மயிலாப்பூர் கோட்டத்தில் உள்ள மின் தடை நீக்க பிரிவுகளுக்கு வாகனம் இல்லாததால் மின் தடையை நீக்க முடியவில்லை என மின் பாதை ஆய்வாளர் கூறிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாப்பூர் பகுதியில் வசிக்கும் நுகர்வோர் தனது வீட்டில் மின் தடை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என உதவி மின் பொறியாளரிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசி உள்ளார். இதற்கு பதிலளித்து பேசிய அவர், " மின் பாதை ஆய்வாளர் கடந்த 2 ஆண்டுகளாக வாகனம் இல்லாமல் உள்ளது.
நான் உயரதிகாரிகளுக்கு வாகனம் தொடர்பாக புகார் அளித்தும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் எங்களால் வந்து மின் பாதிப்பை சரிசெய்ய முடியாது. நீங்கள் இதுகுறித்து யாரிடம் வேண்டுமானலும் புகார் தெரிவியுங்கள்.
மின் ஊழியர் பேசிய ஆடியோ வைரல் (Credits - ETV Bharat Tamil Nadu) இந்த பிரச்னைக்கு விடிவுகாலம் பிறக்கட்டும் என தெரிவித்தார். மேலும், அவர் தனது பெயரை கூறி அதிகாரிகள் எனது மீது நடவடிக்கை எடுக்கட்டும் என மின் நுகர்வோரிடம் பேசிய ஆடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
முன்னதாக, வடகிழக்கு பருவமழையின் ஆய்வுக்கூட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர், மின்சார வாரியத்தில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களும் தமது செல்போனை எந்தக் காரணம் கொண்டும் அணைத்து வைக்கக் கூடாது எனவும், இதனை மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்த நிலையில் தற்போது இந்த ஆடியோ வெளியாகி அனைவரின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க :செல்போனை ஆப் செய்தால் கடும் நடவடிக்கை பாயும்: அமைச்சர் செந்தில் பாலாஜி வார்னிங்
இது ஒருபுறம் இருக்க, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, மயிலாப்பூர் கோட்ட செயற்பொறியாளுக்கு மின்சார தடையை நீக்குவதற்கு வாகனம் தேவை என எழுதிய கடிதம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த கடிதத்தில், "மயிலாப்பூர் கோட்டத்தில் மின் தடை நீக்க பிரிவு ஐந்து இடங்களில் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மின் தடை நீக்க பிரிவிலும் அனுமதிக்கப்பட்ட பதவிகளில் பாதி அளவே களப்பிரிவு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
ஒவ்வொரு மின் தடை நீக்க பிரிவிற்கும் நிர்வாகத்தின் மூலம் வாகன வசதி ஏற்படுத்தி தருவது அவசியம். ஏற்கனவே நிர்வாகத்தால் வாகன வசதி, பணியாளர்களின் எண்ணிக்கை சமஅளவில் இருந்ததால் மின்தடை நீக்கப்பிரிவில் பணிபுரிந்த ஊழியர்கள் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய தடையில்லா மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்க முடிந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மயிலாப்பூர் கோட்டத்தில் உள்ள மின் தடை நீக்க பிரிவுகளுக்கு நிர்வாகம் வாகன வசதி ஏற்படுத்தி தராததினால் பொதுமக்களிடம் குறித்த நேரத்தில் சரிசெய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. ஊழியர்கள் தங்களுடைய சொந்த வாகனத்தை பயன்படுத்தி அலுவலக பணியை செய்கின்ற நிலை உருவாகி உள்ளது.
இதனால் ஊழியர்கள் மன உளைச்சலோடு பணிபுரிகின்ற சூழல் உள்ளது. பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே மோதல் போக்கு உருவாக்க நிர்வாகம் முனைகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. எனவே செயற்பொறியாளர் இக்கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து மயிலாப்பூர் கோட்டத்தில் உள்ள மின் தடை நீக்க பிரிவுகளுக்கு தேவையான வாகன வசதியை ஏற்படுத்தி தந்து அப்பிரிவு ஊழியர்கள் சிறப்பாக பணிபுரிந்திட வழிவகை செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்