தூத்துக்குடி: அறிவுரை வழங்கிய காவலாளியை ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் தூத்துக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ராஜன் மகன் பாலகுமார் (28). இவர் கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இவர் நேற்று (ஜன.18) பள்ளி அருகே உள்ள கடையில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பாலகுமாரை அதே பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் 14 வயது சிறுவன் அரிவாளால் தாக்கியுள்ளார். இதில், அவருக்கு கழுத்தருகே வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காயமடைந்த பாலகுமார் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.