மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கர்ப்பமாக உள்ள சிறுமி ஒருவரை சிகிச்சைக்காக அவரது தாயார் அழைத்து வந்துள்ளார். 16 வயதே நிரம்பிய அந்த சிறுமி 9 மாத கர்ப்பிணியாக இருப்பது மருத்துவர்களின் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை அடுத்து, மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள், மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், அந்த சிறுமி சென்னையில் உறவினர் வீட்டில் இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சரண் என்பவரை காதலித்து வந்ததாகவும், இது குறித்து தனது தயாரிடம் தெரிவித்ததாகவும், அதன்பேரில் சரணை மயிலாடுதுறை வரவழைத்த தனது தாயார், கடந்த ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அன்று ஒரு கோயிலில் வைத்து சரணுக்கும், தனக்கும் திருமணம் செய்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், திருமணமான பின்பு சென்னையில் தனியாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், முதல் பிரசவம் என்பதால் தனது தாயார் மயிலாடுதுறைக்கு அழைத்து வந்ததாக அந்தச் சிறுமி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலக சமூக பணியாளர் ஆரோக்கியராஜ் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர் சுப்ரியா, துணை காவல் ஆய்வாளர் ராதாபாய் மற்றும் மகளிர் போலீசார் குற்றம் சாட்டப்பட்ட சரணை கைது செய்தனர்.
இதன் பின்னர், கைது செய்யப்பட்ட சரண் நாகை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாகை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அந்த 16 வயது சிறுமியின் தாய் மீதும் குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது, தற்போது குழந்தைபேறுக்காக சிறுமியுடன் அவரது தாய் துணையாக இருப்பதாகவும், குழந்தை பிறந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இந்த வழக்கு குறித்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:போலீசாரிடம் போக்கு காட்டிய ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டது எப்படி?