தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாபநாசம் அருகே 12 அடி நீளம் உள்ள ராஜநாகம் பிடிபட்டது! - திருநெல்வேலி செய்திகள்

King cobra captured: சமீபகாலமாக திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள அனவன் குடியிருப்பு பகுதியில் வனவிலங்குகள் அச்சுறுத்தல் அதிகமாகி வரும் நிலையில், 12 அடி நீளம் ராஜநாகம் பிடிபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

King cobra
ராஜநாகம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 5, 2024, 10:52 AM IST

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பாபநாசம், காரையாறு அணைகள் அமைந்துள்ளன. பாபநாசம் வனப்பகுதியில் இருந்து முதல் ஊராக அனவன் குடியிருப்பு என்ற கிராமம் அமைந்துள்ளது. வனப்பகுதிகள் சூழ்ந்த இக்கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயிகள் நெல், வாழை, கரும்பு போன்ற பயிர்களை பயிரிடுவார்கள்.

இந்த நிலையில், கடந்த பல ஆண்டுகளாக அருகில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து யானை, கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் அனவன் குடியிருப்பு ஊருக்குள் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இச்சம்பவம் தொடர்கதையாக நடைபெற்று வரும் சூழலில் சில தினங்களுக்கு முன்பு அடுத்தடுத்து மூன்று நாட்களில் யானைகள், கரடிகள், சிறுத்தை போன்றவை அனவன் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியது.

பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் வனத்துறையினர் அங்கு முகாமிட்டு இரவு நேரத்தில் சுற்றித்திரிந்த யானைகளை மலைப்பகுதிக்குள் விரட்டினர். அதேபோல சிறுத்தை, ஆட்டு குட்டிகளை கடித்தது. மேலும் கரடிகளும் ஆங்காங்கே உலாவி வந்தன. தொடர்ச்சியாக அங்கு வனத்துறையினர் முகாமிட்டிருக்கும் சூழலில், இன்று அதே அனவன் குடியிருப்பு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகில் சுமார் 12 அடி நீளம் கொண்ட ராஜநாகம் செல்வதை பொதுமக்கள் பார்த்துள்ளனர்.

உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வன அதிகாரி அஜித்குமார் தலைமையில் அங்கு வந்த குழுவினர் பாம்பு பிடிக்கும் கருவி மூலம் 12 அடி நீளமுள்ள ராஜாநாகத்தை லாவகமாக பிடித்தனர். பின்னர், சாக்குப்பையில் அடைத்து அதை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

ஏற்கனவே, இதே கிராமத்தில் சமீபகாலமாக யானைகள், கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் இக்கிராமத்தில் அதிகரித்திருக்கும் நிலையில், ஊருக்குள் ராஜநாகம் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:வால்பாறை அருகே நியாய விலைக்கடையை சூறையாடிய காட்டு யானைக் கூட்டம்!

ABOUT THE AUTHOR

...view details