திருச்சி:96-வது மாநில சீனியர் தடகளப் போட்டிகள் கடந்த மூன்று நாட்கள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் ஆடவர் மற்றும் மகளிருக்கு என தனித்தனியாக ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட 120 விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழகம் சார்பில் பங்கேற்று விளையாடுவர்.
போட்டிகளின் முடிவில் ஆண்கள் பிரிவில் சி.வி.பி அகாடமி 90 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. 2வது இடத்தை 51 புள்ளிகள் பெற்ற எஸ்.டி.ஏ.டி. அணி பெற்றது. பெண்கள் பிரிவில் ஸ்பார்க் அகாடமி 63 புள்ளிகளுடன் முதலிடத்தையும், சி.வி.பி. அகாடமி அணி 62 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பிடித்தன. மொத்தத்தில் 10 தங்கம், 3 வெள்ளி மற்றும் 9 வெண்கலப் பதக்கங்களுடன் 152 புள்ளிகள் பெற்ற சி.வி.பி.அகாடமி அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் தடகள சங்க மாநிலச் செயலாளர் லதா, திருச்சி மாவட்ட தடகள சங்கத் தலைவர் மயில்வாகனன், பனானா லீப் மனோகரன் ஆகியோர் பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.