தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 67.97சதவீதம் வாக்குகள் பதிவு..கடந்த தேர்தலை விட குறைவு! - ERODE EAST CONSTITUENCY BY ELECTION

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 67.97 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. கடந்த முறை நடைபெற்ற இடைத்தேர்தலை விடவும் குறைவாகும்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள்
வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Image credits-Etv Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 6, 2025, 1:49 PM IST

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் 2-வது முறையாக நடைபெற்ற இடைத்தேர்தலில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. முந்தைய இடைத்தேர்தலை விடவும் இது குறைவான வாக்குப்பதிவாகும்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. தேர்தல் களத்தில் திமுக, நாம் தமிழர் கட்சி உட்பட 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தகுதி பெற்ற 2,27,546 வாக்காளர்கள் வாக்களிக்க 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. எந்தவித அசம்பாவித சம்பவமும் இன்றி நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு புள்ளிவிவரங்கள் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வெளியிடப்பட்டன. ஈரோடு கிழக்கு தொகுதியில் மாலை 6 மணி வரை 67.97சதவீதம் வாக்குப்பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் 74.79 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில் இந்த முறை அதை விட குறைவாகவே வாக்குகள் பதிவாகின.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி ராஜகோபால் சுன்கரா,"கள்ள ஓட்டு போடப்பட்டதாக ஒரே ஒரு புகார் மட்டும் வர பெற்றிருக்கிறது. ஆனால் கள்ள ஓட்டு போட வாய்ப்பு இல்லை. முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே வாக்குப்பதிவு நடைபெற்றது. எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது,"என தெரிவித்தார்.

இதையும் படிங்க:பயணிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக புகார்... தெற்கு ரயில்வேக்கு ரூ.1.40 லட்சம் அபராதம்!

பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்குபதிவு நேரம் நிறைவடையும் முன்பே பலர் வாக்குகளை செலுத்தி விட்டனர். எனவே, இந்த முறை வாக்குப்பதிவு நேரம் முடிந்த பின்னர் யாரும் வாக்குச்சாவடியில் காத்திருக்கும் சூழல் எழவில்லை. 237 வாக்குச்சாவடிகளிலும் பதிவான வாக்குகளைக் கொண்ட மின்னணு இயந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டன. சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details