ராமநாதபுரம்: பேரழிவால் பாதிக்கப்பட்டு 60 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்றளவும் குடிசை வீடுகளில் அடிப்படை வசதிகளான மின்சாம், குடிநீர், மருத்துவம் ஆகியவை இல்லாமல் வாழ்வதற்கே போராடி கொண்டிருக்கும் தனுஷ்கோடி மக்களின் வாழ்வு குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
பரப்பரபாக இயங்கிக் கொண்டிருக்கும் துறைமுகம், அதனருகேவுள்ள இரயில்வே நிலையத்தில் நிரம்பி வழியும் பயணிகள், இருபுறமும் நீல வர்ணத்தில் கடலும், இதமான காற்றும், எந்த நேரத்திலும் மீன் பிடிக்கும் மீனவர்கள் என தொழில் வளர்ச்சியில் மிகப்பெரிய முன்னேற்றமடைந்த வணிக நகரமாக இருந்தது தனுஷ்கோடி.
ஆனால், 1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி, மன்னார் வளைகுடாவில் உருவான புயலின் காரணமாக, ராமேசுவரம் தீவின் கிழக்கு முனையில் அமைந்திருந்த தனுஷ்கோடி நகரம் முழுவதும் அழிந்தது. அந்த கோரப்புயலின் தாக்கத்திலிருந்து இன்று வரை தனுஷ்கோடி மீளவே இல்லை. அன்று வீசிய புயலால் இந்தியாவின் தேசப் படத்திலிருந்து தனுஷ்கோடி துறைமுகமே காணாமல் போயுள்ளது.
புயலால், தனுஷ்கோடியில் இருந்த பெரிய கட்டடங்கள், பிள்ளையார் கோயில், தேவாலயம், இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலம் என அனைத்தும் இடிந்து தரைமட்டமாயுள்ளது. தனுஷ்கோடி அடியோடு அழிந்த நிலையில், அப்பகுதி முழுவதும் மண் மேடாக மாறியது. ஆனால், புயலின் அடையாளமாக இன்றும் சிதலடைந்த தேவாலயமும், சில கட்டடங்கள் மட்டும் அப்பகுதியில் எஞ்சியுள்ளன.
இதையும் படிங்க:பர்வதமலைக்கு போகப் போறீங்களா?.. அப்போது இத தெரிஞ்சுகிட்டு போங்க!
புயலில் இருந்து தப்பிய தனுஷ்கோடியின் பூர்வகுடி மீனவர்கள் வேறு வழியின்றி வாழ்வாதாரத்திற்காக ராமேஸ்வரம் பகுதியில் வாழத்தொடங்கியுள்ளனர். இதன் பிறகு, கடந்த 2017 ஆண்டில் நெடுஞ்சாலை துறையின் மூலமாக அரிச்சல்முனை வரை சாலைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து வசதி மற்றும் சுற்றுலா பயணிகள் சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வந்ததால் தற்போது சுற்றுலா தலமாக மாறியுள்ளது.