சென்னை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் ஓட்டுநராக பணியாற்றியவர் சீனிவாசன். இவர் கடந்த ஜூன் மாதம் பணி ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், சீனிவாசன் தனது பள்ளிச் சான்றுகள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளில் தனது பிறந்த நாளை 1969 எனக் குறிப்பிடுவதற்கு பதில், 1964 எனக் குறிப்பிட்டுள்ளதாகவும், சமீபத்தில் தான் அதை கவனித்ததாகவும், இதை திருத்தக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்கும்படி போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, '' மனுதாரரின் மனுவில் கூறியுள்ள ஆதாரங்களைப் பார்க்கும்போது, ஒரு வயதில் முதல் வகுப்பில் சேர்ந்தது போலவும், 13 வயதில் 1982ல் 12 ம் வகுப்பை முடித்துள்ளது தெரிய வந்துள்ளதாகச் சுட்டிக்காட்டி, முழுக்க முழுக்க பொய்யான தகவலை தெரிவித்துள்ளதாகக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், மனுதாரருக்கு 50 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அத்தொகையை இரண்டு வாரங்களில் மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்கு நேரில் சென்று செலுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:"ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரத்தில் காவல்துறையின் விசாரணை திருப்தி இல்லை" - தேசிய எஸ்சி எஸ்டி ஆணையம் காட்டம்!