தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் முதல் அவ்வப்போது பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 42 அடியில் இருந்து படிப்படியாக உயர்ந்து கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி அதன் முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியை எட்டியது.
இதனைத் தொடர்ந்து அணைக்கு வரும் நீர் அப்படியே மஞ்சளாற்றில் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாத நிலையில் நேற்று (ஆக.11) மாலை முதல் நள்ளிரவு வரை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு நீர் வரத்து 50 கன அடியாக வந்துகொண்டு இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து, மஞ்சளாறு அணையில் இருந்து வரும் 50 கன அடி உபரி நீரை மஞ்சளாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் மஞ்சளாறு அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கண்மாய் மற்றும் குளங்களில் நீரை நிரப்பும் பணியை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
மீண்டும் மஞ்சளாறு அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மஞ்சளாறு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுமட்டும் அல்லாது, தற்பொழுது அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியாக உயர்ந்துள்ளது.