தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 2:25 PM IST

ETV Bharat / state

தமிழகம் வரும் பிரதமர் மோடி.. சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு.. முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்! - lok sabha election 2024

PM Modi Arrives in Chennai: பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரம் செய்ய 2 நாள் பயணமாக சென்னை வருவதையொட்டி, சென்னை பழைய விமான நிலையத்தில் இன்று காலை முதல் நாளை மதியம் வரை ஐந்தடுக்கு பாதுகாப்பு முறை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

PM Modi Arrives in Chennai
PM Modi Arrives in Chennai

சென்னை:நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் பாஜக மற்றும் பாஜக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்வதற்காக 2 நாள் பயணமாக தமிழ்நாடு வருகிறார். தற்போது தமிழ்நாடு வரும் பிரதமர் எங்கெல்லாம் செல்கிறார் என்ற முழுத்தகவல் வெளியாகியுள்ளது.

முதல் நாள்:பிரதமர் மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.10 மணிக்கு தனி விமானத்தில், மகராஷ்டிரா மாநிலம் கோண்டியா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, மாலை 6.05 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கு பாஜக சார்பில் பிரதமருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அதன் பின்பு மாலை 6.10 மணிக்கு, பிரதமர் சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து, காரில் புறப்பட்டு ஜிஎஸ்டி சாலை வழியாக, மாலை 6.30 மணிக்கு தியாகராய நகர் (T.Nagar), பாண்டி பஜார் செல்கிறார். அங்கு மாலை 6.30 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை, 'ரோடு ஷோ' (Road show) நடத்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

அதில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக கூட்டணி வேட்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். அதனைத் தொடர்ந்து, இரவு 7.35 மணிக்கு பிரதமர் மோடி காரில் புறப்பட்டு, இரவு 7.55 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகை வருகிறார். அதன் பின்பு, இரவு ஆளுநர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

இரண்டாம் நாள்: நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து காரில் புறப்படும் பிரதமர், காலை 9.15 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து காலை 9.20 மணிக்கு, தனி ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் மோடி, காலை 10.10 மணிக்கு வேலூர் செல்கிறார். பின்னர் வேலூரில் காலை 10.15 மணியில் இருந்து 11.05 மணி வரை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசவுள்ளார்.

அதன்பின்னர், காலை 11.15 மணிக்கு வேலூரில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர், காலை 11.45 மணிக்கு அரக்கோணம் செல்கிறார். அரக்கோணத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு பகல் 12.50 மணிக்கு கோவை விமான நிலையம் செல்கிறார். கோவை விமான நிலையத்தில் இருந்து தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு பகல் 1.20 மணிக்கு, பொள்ளாச்சி செல்கிறார். தொடர்ந்து பகல் 1.30 மணியிலிருந்து, 2.20 மணி வரையில் பொள்ளாச்சியில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

அதன்பின் பொள்ளாச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு, மாலை 3 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். மாலை 3.05 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்படும் பிரதமர், மாலை 5 மணிக்கு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் விமான நிலையம் செல்கிறார்.

5 அடுக்கு பாதுகாப்பு: பிரதமர் மோடி இன்று மாலை தனி விமானத்தில் மகராஷ்டிரா மாநிலம் கோண்டியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, சென்னை வந்து நாளை காலை மீண்டும் சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில், வேலூருக்கு புறப்பட்டு செல்ல இருப்பதால், சென்னை பழைய விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்று காலையிலிருந்தே அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது, சென்னை பழைய விமான பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை பழைய விமான நிலைய வளாகத்தில் உள்ள சரக்கக பகுதிகள், கொரியர் அலுவலகங்கள், மற்ற நிறுவனங்கள் போன்றவைகளுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. அதோடு விமான நிலைய ஓடுபாதை பராமரிப்பிற்காக, பணிக்கு வருகின்ற தற்காலிக ஒப்பந்த ஊழியர்களுக்கு இன்று மதியத்தில் இருந்து, நாளை புதன்கிழமை மதியம் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

பழைய விமான நிலைய வளாகப் பகுதிகளுக்குள் அடையாள அட்டை இல்லாத புதிய நபர்கள் வருகைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய விமான நிலைய வளாகப் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தி வைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை பழைய விமான நிலைய பகுதியில் பிரதமர் வருகையால் போடப்பட்டுள்ள 5 அடுக்கு பாதுகாப்பு முறை, இன்று காலையில் இருந்து நாளை மதியம் வரை அமுலில் இருக்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு! - TNPSC Group 2 Result

ABOUT THE AUTHOR

...view details