சென்னை :இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு தமிழக திரும்பிய புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 5 மீனவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில், தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழ்நாட்டின் ராமேஸ்வரம், புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த அக் 9ம் தேதி அதிகாலை விசைப்படகில் சென்று கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் அங்கு வந்து தமிழக மீனவர்களை சுற்றி வளைத்து எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி மீனவர்களை கைது செய்து படகு மற்றும் மீன்பிடி வலைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் மீனவர்களை கொண்டு சென்று இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மீனவர்களின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு அவசர கடிதம் எழுதி, மீனவர்களையும் அவர்கள் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தினார்.
இதையும் படிங்க :"2026 சட்டமன்றத் தேர்தலில் 50 தொகுதிகளில் போட்டி" - நெய்தல் மக்கள் கட்சி தலைவர் கு.பாரதி தகவல்!
இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்நிலையில் இலங்கை நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக மீனவர்கள் புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 பேர், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒரு மீனவர் ஆகிய 5 மீனவர்களை விடுதலை செய்தது. இதன் பின்னர் மீனவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்திய தூதரக அதிகாரிகள், மீனவர்கள் 5 பேரையும் தங்கள் பராமரிப்பில் சில நாட்கள் வைத்திருந்து அதன் பின்பு அவர்களை இந்தியாவிற்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொண்டனர். அதன்படி, நேற்று நள்ளிரவு இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து சென்னை வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானத்தில் 5 மீனவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் மீனவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்