தூத்துக்குடி:தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயம் ரோம் நகரின் கத்தோலிக்க தலைமை பீடமான வாடிகன் சிட்டியால் பசிலிகா அந்தஸ்து பெற்றது. இப்பேரலாயத்தில் அமைந்துள்ள மாதா சொரூபம், கடந்த 469 ஆண்டுகளுக்கு முன்பு புனிதர் பிரான்சிஸ் சவேரியாரால் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டு இந்த பேராலயத்தில் வைக்கப்பட்டது.
இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக 10 நாட்கள் திருவிழா நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு 442-ம் ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. இதைத்தொடர்ந்து பனிமயமாதா உருவம் பொறித்த கொடியை ஊர்வலமாக பங்கு தந்தைகள் கொண்டுவந்து பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பங்கு தந்தைகள் பொதுமக்கள் கொடியை பிடித்து ஏற்றினர்.
அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘மரியே வாழ்க’ என முழக்கமிட்டனர். மேலும் புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டு கைகளை தட்டி தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர். மேலும் இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி கலந்து கொண்டனர்.