மயிலாடுதுறை:காரைக்கால் மாவட்டம் பிள்ளைத்திருவாசல் வாஞ்சி ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த அய்யப்பன் என்பவரின் மகன் செல்வராஜ். இவர் தனக்கு சொந்தமான PY 01 VB 1491 என்ற பதிவு எண் கொண்ட சாம்பல் நிற டொயோட்டா இன்னோவா சொகுசுக் காரில் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி பாண்டிச்சேரியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டு, பின்னர் சீர்காழி புறவழிச் சாலை வழியாக திரும்பி தனது சொந்த ஊரான காரைக்காலுக்கு வந்துள்ளனர்.
அப்போது சீர்காழி நான்கு வழிச் சாலையில் செல்லும் போது, அய்யப்பனின் காருக்கு முன்பாக அவர் காரின் பதிவு எண்ணிலேயே அதே நிறத்தில் மற்றொரு டொயோட்டா இன்னோவா கார் சென்று கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்த காரினை பின் தொடர்ந்து சென்று காரினை வழி மறித்துள்ளார்.
பின்னர் அந்த காரில் இருந்தவர்களிடம் தனது காரின் பதிவெண்ணை உங்கள் காருக்கு எப்படி பயன்படுத்துவீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது காரில் இருந்து இறங்கி வந்த சீர்காழி அருகே உள்ள கீழ அகணி கோயில்பத்து கிராமத்தைச் சேர்ந்த மனோ, சச்சிதானந்தம், பாலகுரு, மதன் சிங் ஆகிய 4 நபர்களும் அய்யப்பனை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி கீழே தள்ளிவிட்டது மட்டுமின்றி, கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து அவர்கள் வந்த போலி பதிவெண் கொண்ட காரில் தப்பிச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்குகளை மட்டும் குறிவைத்து திருடிய நபர் கைது.. போலீசில் சிக்கியது எப்படி?
அதைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக அய்யப்பன் நடவடிக்கை எடுக்கக் கோரி, சீர்காழி காவல் நிலைத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சீர்காழி போலீசார், தப்பிச் சென்ற நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு, தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் சீர்காழி கோயில்பத்து புறவழிச் சாலையில், போலீசார் வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்த போது அவ்வழியாக பதிவெண் பலகை இல்லாமல் வந்த இன்னோவா கார் ஒன்று வந்துள்ளது.
அந்த காரை நிறுத்தி மேற்படி வாகனத்தின் பதிவெண் குறித்து கேட்ட போது, அவ்வாகனத்தில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்துள்ளனர். அதனால் சந்தேகமடைந்த போலீசார் சோதனை மேற்கொண்டபோது, காரின் முன் பக்கம் ஓட்டுநர் இருக்கைக்குக் கீழ் PYO1 VB 1491 என்ற பதிவெண் கொண்ட பலகை இருந்துள்ளது.
பின்னர், இது தொடர்பாக காரில் வந்த 4 நபர்களையும் பிடித்து விசாரணை செய்தனர். அதில், தங்கள் வாகனத்திற்கு மற்றொரு வாகனத்திற்கு ஒதுக்கப்பட்ட பதிவெண்ணில் போலியாக பதிவெண் பலகை தயார் செய்து பயன்படுத்தி வந்ததும், அய்யப்பன் என்பவர் அளித்த புகாரின் பேரில் சீர்காழி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்த போலீசார், பதிவெண் மாற்றப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்து, 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
மேலும் பிடிபட்ட போலி பதிவெண் எண் கொண்ட காரை பயன்படுத்தி சீர்காழியில் முக்கிய பிரமுகரை கொலை செய்ய சதி திட்டமா? கூலிப்படை கும்பலா? என போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்