தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த நபர்கள்.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்! - Arrested Roaming Around with Gun - ARRESTED ROAMING AROUND WITH GUN

Illegal Gun Seized In Coimbatore: கோவையில், ரவுடி கும்பலுக்கு இடையூறாக இருந்த நபரை கடத்தி கொலை செய்ய திட்டமிட்டு துப்பாக்கியுடன் திரிந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் நாட்டு துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட நபர்கள் புகைப்படம்
கோவையில் நாட்டு துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட நபர்கள் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 25, 2024, 2:09 PM IST

கோயம்புத்தூர்: கோவை சொக்கம்புதூர் முத்தண்ணன்குளம் சாலையில், செல்வபுரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஒரே பைக்கில் வந்த 3 பேரை போலீசார் வழி மறித்துள்ளனர். ஆனால், அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால், விரட்டிச் சென்று அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், அவர்கள் கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் குமார், தீத்திபாளையன் அருள் நகரைச் சேர்ந்த ஜாலாலுதீன், இடையர்பாளையம் பி.என்.டி காலனியைச் சேர்ந்த கிட்டான் (எ) சரவணக்குமார் என்பதும், இவர்கள் அனைவரும் ரவுடி கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, சஞ்சய் குமாரை சோதனை செய்தபோது, அவரிடம் நாட்டு கை துப்பாக்கி ஒன்று இருந்துள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், துப்பாக்கியைப் பறிமுதல் செய்துவிட்டு, தீவிர விசாரணை செய்துள்ளனர்.

மேலும், அதில் பிடிபட்ட நபர்கள் பிரபல ரவுடி சஞ்சய் ராஜா என்பவரின் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதும், சஞ்சய் ராஜா கடந்த ஆண்டு பசுபதி பாண்டியன் என்பவரை ஆவாரம்பாளையத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதும், தற்போது அந்த குற்றத்திற்காகக் கோவை சிறையில் இருப்பதும் தெரிய வந்தது.

இந்த நிலையில், இக்கும்பலுக்கு இடையூறாக பொன்குமார் என்பவர் இருப்பதாகவும், அவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, கடத்திச் சென்று கொலை செய்யத் திட்டமிட்டதும் தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அந்த 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், கூட்டாளியான செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சல்பல்கான் என்பவரையும் கைது செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, இவர்கள் 4 பேர் மீதும் கோவையில் உள்ள காவல்நிலையங்களில் கொலை மிரட்டல், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்த வழக்கையும் அவர்கள் மீது பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க: வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்டவரின் வீட்டில் பாய்ந்த பெட்ரோல் குண்டு!

ABOUT THE AUTHOR

...view details