தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் நான்கு குழந்தை திருமணம் நடைபெறவுள்ளதாகத் தருமபுரி குழந்தைகளுக்கான இலவச அழைப்பு எண் 1098 என்ற எண்ணிற்குப் புகார் வரப்பெற்றது. இதன்பேரில், குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள், காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் ஆகியோர் நேரில் சென்று கள விசாரணை மேற்கொண்டனர்.
இதில், நல்லம்பள்ளி வட்டம், கம்மம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தருமபுரி வட்டம், அதகபாடி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தருமபுரி வட்டம், கொண்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அரூர் வட்டம், வடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 16 சிறுமிக்கு ஆகியோர் திருமணம் நடைபெற இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இந்த 4 திருமணங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட சிறுமிகள் அனைவரும் குழந்தைகள் நலக் குழும வரவேற்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 18 வயது பூர்த்தி அடையாத சிறுமிகளுக்கும், 21 வயது பூர்த்தி அடையாத சிறுவர்களுக்கும் பெற்றோர்கள் எவரேனும் திருமணம் ஏற்பாடு செய்யதாலோ அல்லது திருமணம் செய்து வைத்தார்கள் என கண்டறியப்பட்டால் அவர்கள் மீது காவல்துறை மூலம் சட்ட ரீதியாகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற இளம் வயது திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, குழந்தை தொழிலாளர்கள், பள்ளி செல்லா குழந்தைகள் போன்ற குழந்தைகளுக்கு எதிரான செயல்கள் நடைபெறுவதைக் கண்டறியப்பட்டால் உடனடியாக குழந்தைகளுக்கான இலவச அழைப்பு எண்.1098 என்ற எண்ணிற்கோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக தொலைப்பேசி எண்: 04342-232234 என்ற எண்ணிற்கோ புகார் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தமிழக கும்கிகளின் உதவியை நாடிய ஒடிசா அரசு.. காரணம் என்ன?