திருச்சி:நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் வாக்குகளுக்காகப் பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்கும் விதமாகத் தேர்தல் ஆணையம் பறக்கும் படைகளை அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வையம்பட்டியில், நேற்று (வியாழக்கிழமை) மாலை குணசேகர் தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வாகனம் ஒன்று சென்றுள்ளது. பின்னர் அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் ரூ.38 லட்சம் உரிய ஆவணங்களின்றி இருந்தது தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து வாகனத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகம் எடுத்துச் சென்றனர். பின்னர் வாகனத்திலிருந்த ரூ.38 லட்சத்தை, ஏடிஎம் பணம் நிரப்பும் வாகனத்தின் பொறுப்பாளர் பிரகாஷ் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்துச் சென்றதை உறுதிப்படுத்தி அந்த பணத்தை வட்டாட்சியர் தனலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து, 10 லட்சத்திற்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், வருமான வரித்துறையினரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஏடிஎம்களில் பணம் நிரப்பும் வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை எடுத்துச் சென்ற சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பொன்முடி விவகாரம்; முதலமைச்சர் முடிவே இறுதி..ஆளுநர் ஒத்துப்போக தான் வேண்டும் - துரை வைகோ - Governor RN Ravi In K Ponmudy Issue