தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3500 ஆண்டுகள் பழமையான மண் ஜாடி.. மலை அடிவாரத்தில் பள்ளி மாணவனுக்கு கிடைத்த வரலாற்று பொக்கிஷம்! - Dharmapuri Historical pot

தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அடுத்த ராசிகுட்டை கிராமத்தின் அருகே உள்ள குன்றின் அடிவாரத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது 3500 ஆண்டுகள் பழமையான மண் ஜாடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மண் ஜாடியுடன் பள்ளி மாணவன் வித்யாகரன்
மண் ஜாடியுடன் பள்ளி மாணவன் வித்யாகரன் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2024, 3:13 PM IST

தருமபுரி: மாரண்டஹள்ளி அடுத்த ராசிகுட்டை கிராமத்தின் அருகில் உள்ள குன்றின் அடிவாரத்தில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது பானை ஓடு ஒன்று தென்பட்டது. மாரண்டஹள்ளி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் வித்யாகரன் என்ற மாணவன் அதனை அகற்ற முயன்ற போது அது ஒரு மூன்று கால்கள் உள்ள ஜாடி ஒன்றின் பகுதி என்பதை கண்டுபிடித்துள்ளார்.

அந்த ஜாடியின் ஒரு பகுதி சிறுது உடைந்திருந்தது. மேலும் இரண்டு உடைந்த ஜாடிகளும் அந்த பகுதியில் கிடைத்துள்ளன. குன்றின் அடிவாரத்தில் கிடைத்த இந்த மட்பாண்டங்களை மாணவன் வித்யாகரன் தன்னுடைய வரலாற்று ஆசிரியர் வீரமணியிடம் காட்டியுள்ளார். அவர், உடனடியாக தகடூர் அதியமான் வரலாற்று சங்கத்தின் தலைவர், தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற இணை இயக்குநர் சுப்பிரமணியத்தைத் தொடர்பு கொண்டு இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

பின்னர், தகடூர் அதியமான் வரலாற்று சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் மருத்துவர் செந்தில், ராஜன், ஆகியோர் ராசிகுட்டைக்குச் நேரில் சென்று அந்த மட்பாண்டங்களை ஆய்வு செய்தனர். இவற்றை ஆய்வு செய்த சுப்பிரமணியன் இவை 3500 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று தெரிவித்தார். ராசிகுட்டை குன்றின் ஓரங்களில் தொல் பழங்கால மனிதர்களின் ஈமச் சின்னங்களும் முன்பே கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதுகுறித்து தகடூர் அதியமான் வரலாற்று சங்கத்தின் செயலாளர் மருத்துவர் செந்தில் கூறுகையில், "தருமபுரி மாவட்டத்தில் பங்குநத்தம், பெரும்பாலை ஆகிய பகுதிகளில் நடந்து வரும் அகழ்வாய்வுகளிலும், 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு மனிதர்கள் வாழ்ந்து வந்திருப்பதற்கான சான்றுகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழ்வாய்வில் பழந்தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள் கண்டறியப்பட்டு இருக்கின்றன. சென்னானூர் பெரும் நகரமாக இருந்திருக்கக்கூடும். இவ்வூர் கீழடி காலத்துக்கும் முந்தைய வாழ்விடமாகும். இக்கண்டுபிடிப்புகள் தருமபுரி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் வாழ்ந்து வந்திருப்பதைக் காட்டுகின்றன" எனக் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details