சென்னை:வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக நடந்து வரும் போராட்டம் மற்றும் கலவரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உயர் கல்விக்காக வங்கதேசம் சென்றிருந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பெயரில், தமிழர் நலன் மற்றும் அயல் நாடுகளில் வாழும் தமிழர்களின் மறுவாழ்வு ஆணையரகம், வங்கதேசத்தில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது.
தற்போது, இந்திய மாணவ - மாணவிகள், தூதரக அதிகாரிகள் மூலம் இந்திய எல்லைக்கு அழைத்து வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும், வங்கதேசத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, தமிழக மாணவர்கள் தாயகம் திரும்ப இயலாத சூழலில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் மூலம், வங்கதேசத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொள்ள, வாட்ஸ் ஆப் குழுக்கள் அமைத்து அங்குள்ள தமிழ் மாணவர்களிடம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு அழைத்து வர முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், வங்கதேசத்திலிருந்து முதற்கட்டமாக 21ஆம் தேதி 49 தமிழக மாணவர்களும், 22ஆம் தேதி இரண்டாவது கட்டமாக 82 மாணவர்களும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இதையடுத்து மூன்றாவது நாளான நேற்று 35 மாணவர்கள் விமான மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். இதையடுத்து சென்னை அழைத்து வரப்பட்ட மாணவர்கள் ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு சிறப்பு பேட்டியளித்தனர்.
அப்போது விழுப்புரத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் பர்வேஸ் கூறுகையில், "வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டைத் தடுப்பதற்கு கலவரங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதனால், அங்குள்ள மற்ற நாட்டு மாணவர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய மாநில அரசுகள் இணைந்து அங்கு படிக்கும் படிக்கும் இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், வங்கதேசத்தில் எல்லையோரம் உள்ள மாணவர்களை அகர்தலா அழைத்து வரப்பட்டது. அங்கு வந்த மாணவர்களுக்கு அவரவர் சார்ந்த மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், தமிழ்நாடு அரசு தமிழக மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதோடு, அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து, இலவசமாக இல்லம் வரை அழைத்துச் சென்று விடுகின்றனர்.