விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த திமுகவைச் சேர்ந்த நா.புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் இத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அங்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து, ஜூன் 10ஆம் தேதி முதல் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரகுராமன் தலைமையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் கப்பியாம்புலியூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சென்னையிலிருந்து நெய்வேலிக்குச் சென்ற மாருதி ஸ்விப்ட் டிசையர் கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணங்களின்றி 168 சில்வர் டிபன் பாக்ஸ், 48 பிளாஸ்க்குகள் இருந்தது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூபாய் 32 ஆயிரம் என கூறப்படுகிறது.