வேலூர்:வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியம் நாகநதி கிராமத்தில் எருது விடும் விழா நேற்று(பிப்.24) நடைபெற்றது. அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த எருது விடும் விழாவில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆலங்காயம், வேலூர், குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, காட்பாடி, பேரணாம்பட்டு, ஆம்பூர், ஆந்திர மாநிலத்தின் சில பகுதிகளிலிருந்தும் 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
காளைகள் ஓடும் வீதிகளின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து, காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட தூரத்தைக் குறைந்த நேரத்தில் கடந்த காளையின் உரிமையாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் மாடுகள் முட்டியதில் 5 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு முகாமிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், அரியூர் அருகே உள்ள நம்பிராஜபுரம் நரிக்குறவர் காலணியைச் சேர்ந்த ராம்கி (26) என்பவர் மாடு முட்டியதில் பலத்த காயமடைந்தார்.
இதனையடுத்து அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.ஆனால் எதிர்பாராத விதமாக ராம்கி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வேலூர் கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், எருது விடும் விழாவில் மாடு முட்டி உயிரிழந்த ராம்கியின் குடும்பத்துக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“எருது விடும் விழாவில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த சம்பவத்தில் ராம்கி (வயது 24) என்பவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்தத் துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். இவ்விபத்தில், உயிரிழந்த ராம்கி என்பவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு. முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், பாதிக்கப்பட்ட ராம்கியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சத்துக்கான காசோலையை வேலூர் மக்களவை உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் இன்று(பிப்.24) வழங்கினார். இந்த நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி உடனிருந்தார்.
இதையும் படிங்க:அழிவை நோக்கிச் செல்கிறதா தாமிரபரணி ஆறு? சூழலியல் ஆய்வாளர்கள் முன்வைப்பது என்ன?