சென்னை: சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் மாநில கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் அரசு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்ற விவரத்தையும் அறிக்கையாக தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, சென்னையில் அடிதடியில் ஈடுபட்டதாக கடந்த பத்தாண்டுகளில் கல்லூரி மாணவர்கள் மீது சுமார் 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த திருத்தணியை சேர்ந்த மாணவர் சுந்தர், கடந்த அக்டோபர் 4ம் தேதி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார். கடுமையாக காயமடைந்த அவரை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், அருகில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையும் படிங்க:'கூட்டணிக்கு காசு'.. அந்த அவசியம் அதிமுகவுக்கு இல்லை - உதயநிதிக்கு ஜெயக்குமார் பதிலடி!
அங்கு 4 நாட்கள் சிகிச்சைக்கு பின் கடந்த அக்டோபர் 9ம் தேதி மாணவர் சுந்தர் மரணம் அடைந்தார். இதையடுத்து, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக கொலை (103) வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களில் சந்துரு என்பவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், அடிதடியில் ஈடுபட்டதாக கடந்த பத்தாண்டுகளில் சென்னையில் பயிலும் கல்லூரி மாணவர்கள் மீது 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில், 33 வழக்குகள் ரயில்வே போலீசார் பதிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் கல்வித்துறை செயலாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மோதல் சம்பவங்களை தடுக்க மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரியின் முதல்வர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதனை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்