தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 21 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்! - Fishermen Arrival at Tamilnadu

Fisherman Arrival at Tamilnadu: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 21 மீனவர்கள், நேற்று நள்ளிரவு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை திரும்பிய மீனவர்கள் புகைப்படம்
சென்னை திரும்பிய மீனவர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 3, 2024, 3:23 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் என 21 தமிழக மீனவர்கள் கடந்த ஜூலை முதல் வாரம், இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி, 21 மீனவர்களையும் கைது செய்தனர்.

அதோடு, மீனவர்களின் இரண்டு படகுகள், பிடித்து வைத்திருந்த மீன்கள், மீன்பிடி வலைகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்று, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் படகுகளையும் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசர கடிதம் அனுப்பினார்.

இந்த நிலையில், இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளிடம் அது சம்பந்தமாக பேசினர். இதற்கிடையே இலங்கை நீதிமன்றம், தமிழ்நாடு மீனவர்கள் 21 பேரை கடந்த இரு தினங்களுக்கு முன்பு விடுதலை செய்து, அவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து, இந்தியத் தூதரக அதிகாரிகள், தங்களுடைய பராமரிப்பில் தமிழக மீனவர்களை வைத்திருந்து, அவர்களை தமிழ்நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்க ஏற்பாடுகளைச் செய்தனர்.

மேலும், மீனவர்களுக்கு பாஸ்போர்ட், விசா இல்லாததால், 21 பேருக்கும் எமர்ஜென்சி சர்டிபிகேட்கள் வழங்கி, இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து சென்னை வருவதற்கு விமான டிக்கெட்களும் ஏற்பாடுகள் செய்தனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு இலங்கையிலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 21 தமிழக மீனவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களை வரவேற்று தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை என அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

join ETV Bharat WhatsApp channel click here (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ராமேஸ்வரம் மீனவரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு.. நடுக்கடலில் என்ன நடந்தது? மீனவர் மூக்கையா கூறிய தகவல்

ABOUT THE AUTHOR

...view details