திருவாரூர்: ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்திருந்தது. இதனையடுத்து தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை 72 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு உள்ளது. அதில், தேர்தல் ஆணையத்தின் சார்பில், மைக்ரோ அப்சர்வர் (Micro Observer) நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஒரு சட்டமன்ற தொகுதிக்கு மூன்று பறக்கும் படைகள் வீதம், நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு 12 பறக்கும் படைகள் 24 மணி நேரமும் செயல்படும். அதேபோல, ஒவ்வொரு தொகுதிகளிலும் ஒரு நிலையான கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புகார் எண்: தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பான புகார்களை, 1950 என்கிற வாக்காளர் உதவி எண்ணிற்கும், திருவாரூர் மாவட்ட இலவச தொலைபேசி எண்ணான 18004253578 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும், சி விஜில் (C-VIGIL) என்கிற செயலி மூலமும், தேர்தல் நடத்தை விதி மீறல்கள் குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்களுடன் புகார்களை பதிவு செய்யலாம்.
நடவடிக்கை:தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளை கண்காணிக்க 16 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி என்பதால், வேட்பு மனு தாக்கல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெறும். திருவாரூர் மாவட்டத்தில், 72 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அங்கு சிசிடிவி கேமரா மூலம் நேரடியாக கண்காணிக்கப்படும். அதில் தேர்தல் ஆணையத்தின் சார்பில், மைக்ரோ அப்சர்வர் (Micro Observer) நியமிக்கப்பட்டுள்ளனர்.
பணப்பட்டு வாடாவைத் தடுக்க நடவடிக்கை:ரூ.50 ஆயிரம் வரை ரொக்கமாக பொதுமக்கள் எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. அதற்கு மேல் எடுத்துச் செல்லும் பணத்திற்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனையை தடுக்கும்பொருட்டு அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளோம்.
ஒரு வங்கி கணக்கில் இருந்து, பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணப்பரிவர்த்தனை நடைபெறுவது மற்றும் இதுவரை இல்லாத வகையில், வங்கி கணக்குகளில் பணப்பரிவர்த்தனை போன்றவை நடைபெற்றால், மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்குமாறு வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம்.
அனைத்து பகுதிகளிலும் 72 மணிநேரத்தில், அரசியல் கட்சி சார்ந்த கொடிகள், சின்னங்கள் போன்றவற்றை அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில், 11 சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, 1,400 காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். துணை ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர், ஓய்வு பெற்ற காவலர்களும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதையும் படிங்க:'புதுச்சேரியில் வேட்பாளர்களிடம் ரூ.50 கோடி லஞ்சம் கேட்ட பாஜக' - நாராயணசாமி குற்றச்சாட்டு