தேனி:தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சித்தார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். அவரது மனைவி தமிழ்செல்வி. இந்த தம்பதிக்கு 2 வயதில் லித்திகா ஸ்ரீ என்ற பெண் குழந்தையும், 7 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுமி லித்திகா ஸ்ரீக்கு வாயில் திடீரென நுரை தள்ளியபடி அழுகத் தொடங்கியது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் தமிழ்செல்வி உடனடியாக குழந்தையை அருகில் உள்ள ராஜதானி ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றார். அங்குக் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 400க்கு அதிகமாக இருந்ததாகக் கூறினர்.
இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காகக் குழந்தையைத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குத் தொடர்ச்சியாகச் சிறுமி லத்திகாவிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இந்நிலையில் சிறுமி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ராஜதானி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டால் உயிரிழப்புகள் நிகழும். ஆனால் இரண்டு வயது பெண் குழந்தை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஆண்டிபட்டி பகுதி மக்களிடைய பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் சித்தார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:ராமேஸ்வரம் அருகே இரண்டு மீனவர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு.. மேலும் ஒருவரைத் தேடும் பணி தீவிரம்!