ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் இரண்டு இளைஞர்களுக்கு தலா 20 ஆண்டுகள் தண்டனையும் மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனையடுத்து சிறுமியை அவரது பெற்றோர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிறுமியின் தாய் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் போக்சோ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், அந்த பகுதியை சேர்ந்த சிலர் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. மேலும் இது குறித்து கேட்ட போது அவரது குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக அரக்கோணம் மகளிர் காவல்துறையினர் இரண்டு சிறுவர்கள் உட்பட 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் இரண்டு பேர் சிறுவர்கள் என்பதால் அவர்கள் தொடர்பான விசாரணை வேலூர் சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 8 பேர் மீதான வழக்கு விசாரணை ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.