கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் மாவட்டம் சின்னவேடம்பட்டி துடியலூர் சாலை, ராமன் விஹார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு குழந்தைகள் விளையாட பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் அங்குள்ள குழந்தைகள் காலை மற்றும் மாலை வேளைகளில் விளையாடுவது வழக்கம்.
இதற்காக அங்கு ஊஞ்சல், சறுக்கல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காவில் நேற்று (வியாழக்கிழமை) மாலை 6.45 மணி அளவில் அங்கு வசிக்கும் பிரசாந்த் என்பவரின் மகன் ஜியான்ஸ்(6) மற்றும் பாலசந்தர் என்பவரின் மகள் வியோமா பிரியா(8) ஆகிய இருவரும் அங்குள்ள சறுக்கில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது சறுக்கில் விளையாடிக் கொண்டிருந்த வியோமா பிரியா மற்றும் ஜியான்ஸ் ஆகிய இருவரும் அருகில் உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் தாக்கியதால் மயக்கம் அடைந்து அங்கேயே விழுந்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்த குழந்தைகள் ஓடிச்சென்று அவர்களின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.