மயிலாடுதுறை: மயிலாடுதுறையைச் சேர்ந்த 19 வயது இளைஞர், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக மயிலாடுதுறையைச் சேர்ந்த 19 வயது ஜெயலட்சுமி என்ற இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். ஜெயலட்சுமி மயிலாடுதுறையில் உள்ள ஒரு பாத்திரக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கிடையே இந்த காதல் விவகாரம் குறித்து பெண்ணின் பெற்றோருக்குத் தெரியவர, ஜெயலட்சுமியை வேலையில் இருந்து நிறுத்தி, வீட்டை விட்டு வெளியே அனுப்பவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி பெண்ணின் வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும், அந்த குற்றத்திற்காக இளைஞரைக் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். தற்போது, இளைஞர் ஜாமினில் வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஜெயலட்சுமியின் பெற்றோர் அவரை வேலைக்காக கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அப்பெண் சென்ற சில நாட்களிலேயே யாரிடம் சொல்லாமல் அங்கிருந்து, மயிலாடுதுறையில் உள்ள தனது காதலன் வீட்டுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த பெண்ணின் வீட்டார், தங்களது ஜெயலட்சுமியைக் காணவில்லை எனக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில், நேற்று இரு தரப்பினரையும் வரவழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.