சென்னை:ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள், கடந்த மார்ச் 16ஆம் தேதி, 2 விசைப்படகுகளுடன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது, ராமேஸ்வரம் அருகே மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி 21 மீனவர்களையும் கைது செய்தனர்.
அதோடு 2 படகுகள், மீன்பிடி வலைகள் மற்றும் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர், 21 மீனவர்களையும் இலங்கைக்கு அழைத்துச் சென்ற நிலையில், இலங்கை நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 21 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசர கடிதம் எழுதினார். இதை அடுத்து, இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில், இலங்கை நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரை விடுதலை செய்து, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும், 2 விசைப்படகுகளின் ஓட்டுநர்கள் இருவருக்கும் தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து, இலங்கை சிறைக்கு அனுப்பினர்.
இதற்கிடையே சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 19 மீனவர்களையும், தமிழ்நாட்டுக்கு விமானத்தில் அனுப்பி வைக்க இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில், 19 மீனவர்களுக்கும், இந்திய தூதரக அதிகாரிகள் விமான டிக்கெட்களை ஏற்பாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து, இலங்கையிலிருந்து சென்னைக்கு வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், நேற்று இரவு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: அரக்கோணத்தில் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல்.. நகர தலைவர் காயம்! - Lok Sabha Election 2024