சென்னை:ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது கோடியக்கரை அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் மூன்று படகுகளில் சென்ற 17 மீனவர்களை கைது செய்தனர்.
இதையடுத்து இலங்கையில் உள்ள ஊர்காவல் படை நீதிமன்றத்தில் 17 மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்தது.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் விளைவாக கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி 17 மீனவர்களை விடுவிக்கப்படுவதாக ஊர்காவல் படை நீதிபதி நீதிமன்றத்தில் அறிவித்தார். பின்னர் மீனவர்கள் அனைவரும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் இலங்கை அரசு ஒப்படைத்தது.