சென்னை: சென்னை ஆவடியிலுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 60 அடி சாலையில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் செயல்படுகிறது. மாலை நேரத்தில் பொதுமக்கள் பலர் அந்த ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது பணம் வராமல் வங்கிக் கணக்கில் இருந்து மட்டும் பணம் எடுத்ததாக குறுந்தகவல் மட்டும் வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், வங்கி புகார் எண்ணுக்கு அழைத்து இது குறித்து தெரிவித்துள்ளனர். மேலும், பலர் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காகக் காத்திருந்துள்ளனர். அப்பொழுது சந்தேகப்படும் படியான சிறுவன் ஒருவன் ஏடிஎம் மெஷினை போலி சாவியால் திறந்து பணம் எடுத்துக் கொண்டிருந்துள்ளான். அதுமட்டுமின்றி, கையில் சிப் போன்று வைத்திருந்து அதை பயன்படுத்தி பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த அங்கிருந்த நபர் ஒருவர் வடமாநில சிறுவனை கையும் களவுமாக பிடித்துள்ளனர். பின்னர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, ரோந்துப் பணியில் இருந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அச்சிறுவனை கைது செய்தனர்.